கொரானா வைரஸ்

நேரமாகிக்கொண்டே இருந்தது; வெளிச்சமில்லாத இடத்தில் நேரம் போவது சற்று கொடுமையாகவே இருந்தது. ஏதோ வெளியிலிருந்து வருவது போல் இருந்தது. கட்டையான குரலில், "வாங்க போலாம், அது நமக்கான விண்கலம் தான். இன்னும் ஒருமணி நேரத்துல பூமிக்கு போயிடலாம்", என்ற இயந்திரமனிதனின் கட்டளையை ஏற்றுக்கொண்டது போல கரிகாலன் வெளியே வந்தார்.

நாசா விண்கலம்
நாசாவின் விண்கலம். பட உதவி: நாசா
மிகவும் நெலிந்து போயிருந்த கரிகாலன் கடந்த 20 நிமிடங்களாக உணவு எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. மின்னலொளி யில் இயங்கும் வீட்டின் மின்சாரத்தை துண்டித்திருந்தார். பூமியைப் பற்றிய நினைவுகள் வந்து போயின. கடந்த மூன்று ஆண்டுகளில் தன்னுடைய விண்கலத்தையும், இயந்திரமனிதர்களையும் தவிர வேறு எதையும் கவனத்தில் கொள்ளாத கரிகாலன், தன்னுடைய கொள்ளுப்பேரன் மூன்றாம் கரிகாலனையும், எள்ளுப்பெயர்த்தி நல்லினியையும் வீனசிலிருந்து பூமிக்கு வரச்சொல்லியிருந்தார்.

கரிகாலன் 2020-ம் ஆண்டு புவி வெப்பமயமாதலும் , கொடிய நச்சு பரவுவதன் காரணத்தாலும், செவ்வாய் கிரகத்திற்கு நுழைவிசைவு வாங்கிச்சென்றார். பூமியிலிருந்து வேலைக்கு ஆட்கள் வருவதை செவ்வாய் வாசியினர் விரும்பவில்லை. ஆயினும், ஆயுளை நீட்டிக்கச்செய்யும் ஆராய்ச்சியில் எலான் மஸ்க் விருது வாங்கியிருந்த மாறவர்மனின் கூற்று பொய்யென நிறுவியிருந்ததால் செவ்வாய் செல்வதற்கு நுழைவிசைவு கிடைத்தது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க். பட உதவி: விக்கிப்பீடியா
இரண்டு ஆண்டுகளில் மாறவர்மனும் கரிகாலனும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இரண்டாம் கரிகாலனும், மூன்றாம் கரிகாலனும் மாந்தர் படியாக்கம் முறையில் உருவானார்கள். ஹ்யூமனாய்டுகளை கொள்ளுப்பேரன்களாகவும் எள்ளுப்பெயர்த்திகளாகவும் தத்தெடுத்துக் கொண்டனர். 2030, செவ்வாய் பகுதி-33 நேரப்படி காலை 9:00 மணிக்கு பூமிக்கு முதலாம் கரிகாலன், மூன்றாம் கரிகாலன், நல்லினி, மாறவர்மன் என அனைவரும் வந்திருந்தனர்.

மாறவர்மனின் கையிலிருந்த திறன்கடிகாரம் , 2021-ம் ஆண்டு நவம்பர் 24-ம் நாள், இந்தியநேரப்படி இரவு 8:35 மணிக்கு பூமியில் நடந்த இயற்கைப் பேரழிவைப் பற்றிய காட்சிகளையும் , அதன் பகுப்பாய்வுகளையும் , மனித உயிரிழப்புகளையும் , துயரங்களையும் அனைவரின் கண் முன்னே கொண்டு வந்தது. அரை மணித்துளிகள் இக்காட்சிகள் அனைவரின் கண்முன் தோன்றியது. கரிகாலன் கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்தோடியது. ஒருவொருக்கொருவர் பார்த்துக் கொண்டனர், எதுவும் பேசவில்லை.

கரிகாலன் தன் கண்களை மூடினார், பிறகு திறக்கவே இல்லை...

முற்றும்.


குறிப்பு: இந்தக் கதை, வா. மணிகண்டனின் நிசப்தம் ப்ளாக்கில் நடந்த சிறுகதைப் போட்டிக்காக, Oct 5, 2017 அன்று எழுதியது. போட்டியில் என் கதை தேர்வாகவில்லை.

2020-இல் நடப்பது ஒத்துப்போகிறது. அதனால் குறிப்புகளை சேர்த்துள்ளேன்.


அடிக்குறிப்புகள்


You may also like

No comments: