Showing posts with label Law. Show all posts
Showing posts with label Law. Show all posts
வன்புணர்ச்சி தொடர்பான சட்டங்கள்
வன்புணர்ச்சி தொடர்பான சட்டங்கள் 
“வன்புணர்ச்சி” என்பது, கீழே கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலைகளில் ஒரு ஆண், பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்வதைக் குறிக்கும்.
1. அவளது விருப்பத்திற்கு விரோதமான உடலுறவு. செக்ஸ் ஊழியரான பெண்ணுடன், அவளது சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்வதுகூட கற்பழிப்புதான்;
2. கணவனைப் போல் பாசாங்கு செய்து ஒப்புதலைப் பெறுவது;
3. கொன்றுவிடுவதாக மிரட்டி ஒப்புதல் பெறுவது;
4. நாம் எதற்குச் சம்மதிக்கிறோம்? அதன் விளைவுகள் என்ன? என்பதை அறியாத 16 வயதிற்குக் குறைந்த பெண்ணிடம் சம்மதம் பெறுவது, அல்லது போதைப் பொருள் செலுத்தப்பட்ட நிலையில் அல்லது குடிவெறியில் சுயநினைவில்லாதபோது சம்மதம் பெறுவது அல்லது மனநோயாளிப் பெண்ணின் சம்மதம் பெறுவது;
5. மனைவி 15 வயதிற்குக் குறைந்த சிறுமியாக இருந்தால், அவளோடு உடலுறவு வைத்துக் கொள்வதும் வன்புணர்ச்சிக் குற்றமாகவே கருதப்படுகிறது.
6. நீதிமன்றக் கட்டளை, சம்பிரதாயம், சடங்குகள் காரணமாக கணவனும், மனைவியும் தனித்தனியாக வாழும்போது, கணவன் மனைவியின் சம்மதம் பெறாமல் உடலுறவு வைத்துக் கொள்வது கற்பழிப்புக் குற்றமாகும்.

வன்புணர்ச்சி நடந்ததும் என்ன செய்ய வேண்டும்?

1. தனது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் கற்பழிப்பு நடந்ததை அந்தப் பெண் சொல்ல வேண்டும். அவருடன் அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகச் செல்ல வேண்டும். தாமதப்படுத்தினால். அவள் கற்பழிக்கப்பட்ட அடையாளங்கள் அகன்று, “கற்பழிக்கப்பட்டது” என்ற குற்றத்தை அந்தப் பெண் நிரூபிப்பதில் சிக்கல் ஏற்படும்.
2. கற்பழிக்கப்பட்ட பெண், உடனடியாகக் குளித்துவிடக்கூடாது. துணிகளையும் துவைக்கக் கூடாது. ஏனெனில், கற்பழிக்கப்பட்டது அவள் இருக்கும் நிலை, கற்பழிப்புக் குற்றத்திற்கு முக்கியமான சான்றாகும். அது மட்டுமல்ல; கற்பழிக்கப்பட்ட பெண்ணின் உடையில் கற்பழித்தவனது ரத்தத் துளிகள் அல்லது ரோமம் இருக்கலாம். அவற்றைக் கொண்டு கற்பழிப்பில் ஈடுபட்டவனைப் பிடித்து விடமுடியும். அவனுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபித்துவிட முடியும்.
3. கற்பழித்தவர் செல்வாக்குள்ள நபராக இருந்தால், கற்பழிப்புச் சம்பவம் பற்றி முதலமைச்சர், மாநிலத் தலைமைப்போலீஸ் அதிகாரி, அப்பகுதி எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட ஆட்சியாளருக்குக் கடிதங்களை அனுப்ப வேண்டும்.

காவல்துறையினரின் கடமைகள்:

1. காவல் நிலையத்தில் பொறுப்பு வகிக்கும் அதிகாரி, கற்பழிக்கப்பட்ட பெண் தரும் விவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்துவிட்டு, அந்தப் பெண்ணிற்கு அதைப் படித்துக் காட்ட வேண்டும். அதில் ஒரு பிரதியை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தரவேண்டும். காவல்துறை அலுவலர் அந்தப் பெண்ணின் புகாரைப் பதிவு செய்து கொள்ள மறுத்துவிட்டால், அந்தப் பெண் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரையோ அல்லது உள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நடுவரையோ அணுக வேண்டும்.
2. காவல்துறையினர், அந்தப் பெண்ணை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று, உடற் கூறு சோதனை செய்ய வேண்டும். அந்தப் பெண்ணின் உடல் நிலை, அவளது மனநிலை ஆகியவை குறித்து மருத்துவர் அறிக்கைத் தருவார். இந்த அறிக்கை, கற்பழிப்பு குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கு மிக முக்கியமானதாகும். மருத்துவர்தான் அந்தப் பெண்ணைச் சோதிக்க வெண்டும். காவல்துறையினர் தொடக்கூடாது. அருகாமையில் காவல் நிலையம் இல்லை என்றால், அந்தப் பெண், அருகாமையில் உள்ள மருத்துவரை அணுகி, உடற்சோதனை செய்து, அந்த அறிக்கையின் பிரதியொன்றை, தன் வசம் வைத்திருக்க வேண்டும்.
3. கற்பழிக்கப்பட்டவர் பெயரையோ அல்லது அதுபற்றிய விவரத்தையோ, காவல் துறையினர் வேறு எவரிடத்திலும் கூறக்கூடாது.

கற்பழிப்பிற்குத் தண்டனை:

கற்பழிப்புக் குற்றத்திற்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. சில கற்பழிப்பு வழக்குகளில், வழக்கின் தன்மைக்கு ஏற்ப, நீதிமன்றம், ஆயுள் சிறை தண்டனையும் வழங்கும்.
கீழ்கண்ட வகையைச் சார்ந்த கற்பழிப்பு வழக்குகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது:
1. காவலில் இருக்கும்போது கற்பழிக்கப்பட்டால்;
2. கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்ததும் அந்தப் பெண்ணைக் கற்பழித்தவனுக்கு,
3. பனிரெண்டு வயதுக்குக் குறைந்த சிறுமி கற்பழிக்கப்பட்டால்,
4. ஒரு பெண் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை பல ஆண்கள் கூட்டாகச் சேர்ந்து கற்பழித்தால்;

வன்புணர்ச்சி வழக்குகளில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள்:

1. நீதிமன்றங்களில் வன்புணர்ச்சி வழக்குகள் ரகசியமாக நடத்தப்படுகின்றன.
2. காவலில் பெண் கற்பழிக்கப்பட்டால், எடுத்துக்காட்டாக சிறைகளில் அல்லது மருத்துவமனையில் கற்பழிப்பு நடந்தால், குற்றம் சாட்டப்பட்ட நபர், தான் கற்பழிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டுமே தவிர, தான் கற்பழிக்கப்பட்டதாக அந்தப் பெண் நிரூபிக்கத் தேவையில்லை
3. தனது பொறுப்பில் இருக்கும் பெண்ணை, அந்த நபர் கற்பழித்தால், அந்தப் பெண் சம்மதம் கொடுத்திருந்தாலும் கற்பழித்த நபருக்குச் சிறைத் தண்டனை உண்டு.
4. தான் செய்வது என்னவென்று புரிந்து கொண்ட நிலையில் கற்பழிப்பு முயற்சியில் ஈடுபடும் 10 வயதுச் சிறுவனையும் தண்டிக்க முடியும்.
5. கற்பழிப்புக் குற்றம் நடப்பதற்கு ஏதாவது ஒரு வகையில் உடந்தையாக இருந்த ஆண் அல்லது பெண், குற்றம் புரிந்தவராகக் கருதப்படுவார்.



குற்றவியல் சட்டம் அல்லது காவல்துறை அல்லது நீதித்துறை என்றதுமே பலருடைய நினைவுக்கும் வருவது “கைது” சம்பவம்தான். பிரபலமானவர்களின் கைது சம்பவங்களை தொலைகாட்சியிலும், கற்பனையான கைது சம்பவங்களை திரைப்படங்களிலும் பார்க்கும் பலருக்கு கைது குறித்த ஒரு குழப்பமான புரிதலே இருக்கும்.

நடைமுறையில் ஒரு குற்றம் குறித்து காவல்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தவுடன், அந்த குற்றச்செயலில் பிணையில் விடத்தகாத குற்றத்தை ஒருவர் செய்திருப்பார் என்று நம்புவதற்கு உரிய முகாந்திரம் கிடைத்தவுடன் உடனே நடைபெறும் சம்பவம் “கைது”தான்.


குற்றம் தொடர்ந்து நடைபெறாமல் தடுப்பதற்காகவும், குற்றப்புலனாய்வும் – குற்றவிசாரணையும் நேர்மையாகவும் நடுநிலையாகவும் இடையூறு இன்றி நடப்பதற்காகவும், குற்றம் செய்திருப்பதாக நம்பப்படும் நபரை தடுத்து நிறுத்தி காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே “கைது” ஆகும்.

ஆனால் பல நேரங்களில் புகாரில் எதிரியாக குறிப்பிடப்படும் நபரை கைது செய்யாமல், அவரை தப்பிக்க விடுவதோ – அவரிடம் வேறொரு புகாரை எழுதி வாங்கிக்கொண்டு முதல் புகார்தாரரை கைது செய்வதோ இந்தியாவின் காவல் நிலையங்களில் மிகவும் நடக்கும் வழக்கமான நிகழ்வுகள்தான்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டிவர்கள் மிகவும் கவுரமாக நாட்டில் உலவுவதும், குற்றமற்ற பலர் பொய்யான காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்படுவதும் இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியா போன்ற மனித உரிமைகளில் குறைவான புரிதலைக் கொண்ட பல்வேறு நாடுகளிலும் மிக பரவலாக நடந்து வருகிறது.

இதை தீர்க்கதரிசனத்துடன் கணித்திருந்த இந்திய அரசியல் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அம்பேத்கர், இந்திய அரசியல் சட்டத்திலேயே கைதுகள் குறித்தும் எழுதியுள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 21ன் படி சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் உயிரையும் பறிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 22 (1) இன் படி, “கைது செய்து ஒரு நபரைக் காவலில் வைப்பதற்கு முன், அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான காரணத்தை அவருக்கு தெரிவிக்க வேண்டும். மற்றும் கைது செய்யப்படும் நபரால் தேர்ந்தெடுக்கப்படும் வழக்குரைஞரை கலந்தாலோசிக்கவும், அவரை தமது சட்டரீதியான தற்காப்பிற்கு பயன்படுத்துவதற்கும் உள்ள உரிமைகள் மறுப்பேதுமின்றி வழங்கப்படவேண்டும்”.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 22 (2) இன் படி, “ஒரு நபரைக் கைது செய்து காவலில் வைக்கும்போது, அப்படி கைது செய்யப்பட்ட நபரை, கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அருகே உள்ள ஒரு குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும். அந்த 24 மணி காலக்கெடுவில், கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து அந்த குற்றவியல் நடுவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல தேவைப்படும் பயண நேரத்தை சேர்க்கக்கூடாது. எந்த ஒரு நபரையும், ஒரு குற்றவியல் நடுவரின் உத்தரவின்படி இல்லாமல், அந்த காலக்கெடுவுக்கு மேல் காவலில் வைத்திருக்கக்கூடாது”.

ஒரு நாட்டின் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட உயர்பதவி வகிப்போரின் பணிகளையும், நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகளின் பணிகளையும் வரையறை செய்யும் அரசியல் அமைப்புச் சட்டத்தில், தனி நபரின் கைதுக்கு எதிரான பாதுகாப்புகள் குறித்த மேற்கண்ட செய்திகளை சாதாரணமாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதுபோன்ற சாதாரண அம்சங்களும் இடம் பெற்றுள்ளது ஒரு சுவையான அம்சமாகும். இந்திய காவல்துறையின் இன்றைய அவல நிலையை அண்ணல் அம்பேத்கர் அன்றே உணர்ந்து மிகுந்த தீர்க்க தரிசனத்துடன், குடிமகனின் உரிமைகள் குறித்த அம்சங்களை அரசியல் அமைப்பில் இணைத்தது, அவர் இந்திய மக்கள் மீது கொண்ட கரினத்தையும், காவலர்கள் மீது கொண்ட தொலைநோக்குப் பார்வையையும் குறிக்கிறது.

எனவே ஒரு குற்றச் செயலில் பாதிக்கப்பட்ட நபரோ, குற்றச்செயலை செய்துவிட்டு கைதை எதிர்பார்த்திருக்கும் நபரோ – யாராக இருந்தாலும் கைது சம்பவத்தின் சட்டக்கூறுகள் குறித்து குறைந்த பட்ச புரிதலையாவது பெற்றிருப்பது நல்லது. இதன் மூலம் சட்டவிரோத கைதுகளை குறைப்பதுடன், சட்டரீதியாக கைது செய்யப்பட வேண்டியவர்கள் தப்பிப்பதையும் தவிர்க்க முடியும்,

சட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும்:

இந்தியாவின் குற்றவியல் நீதிமன்றங்களும், காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகளும் அவற்றிற்கு விதிக்கப்பட்ட சட்ட நெறிமுறைகளின்படியே செயல்பட வேண்டும் என்றாலும், பலநேரங்களில் சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு சட்டத்திற்கு முரணாக செயல்படுவதில் காவல்துறையும், அரசு வழக்கறிஞர்களும் முனைப்பு காட்டுகின்றனர்.

எந்த ஒரு கைது சம்பவமும் பல்வேறு சட்ட அம்சங்களின் நிபந்தனைக்கு உட்பட்டே செய்யப்படவேண்டும். இவ்வாறு சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறும் கைது சம்பவங்களைவிட சட்ட அம்சங்களை புறந்தள்ளி தனிமனித விருப்பு – வெறுப்புகளால் உருவாகும் சட்ட விரோத கைது சம்பவங்களே இந்தியாவில் அதிகம். சட்ட ரீதியான கைதுகளை உரிய முறையில் கண்காணிக்க வேண்டியதும், சட்ட விரோத கைதுகள் குறித்து தெரிய வரும்போது அதுகுறித்து உறுதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு குற்றவியல் நீதிமன்றங்களிடமே உள்ளது. ஆனால் பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான குற்றவியல் நீதிமன்றங்கள் இதுபோன்ற அம்சங்களை பரிசீலிப்பதே இல்லை.

சட்டவிரோத கைதுகளால் பாதிக்கப்படும் நபர்களில் வசதி மிக்கவர்கள், உயர்நீதிமன்றத்தை அணுகும்போது மட்டுமே அவர்களுக்கான தீர்வுகள் கிடைக்கின்றன. இதற்கான வழிவகைகளை அறிந்து கொள்ளும் முன் சட்டரீதியான கைது குறித்து புரிந்து கொள்வோம்.

கைது நடைமுறைகள்:

கைது நடவடிக்கைக்கான நடைமுறைகளை குற்றவியல் நடைமுறைச் சட்டம் நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டத்தின் பிரிவு 46(1)ன் படி, “உரிய அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட வேண்டிய நபரிடம், அவரை கைது செய்வதற்கான காரணத்தை தெரிவித்தவுடன், கைது செய்யப்படுவதற்கு உடன்படுவதை வெளிப்படையாக தெரிவித்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் கைது செய்யப்படவேண்டிய நபர், கைது செய்யப்படுவதற்கு உடன்படாதபோது அவருடைய உடலை நேரடியாக தொட்டு கைது செய்யலாம். மேலும் கைது செய்யப்பட்ட நபர் தப்பித்து சென்றுவிடாத வகையில் காவலில் வைக்கலாம்”.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 46(2)ன் படி, “கைது செய்யப்பட வேண்டிய நபர், கைது முயற்சியை வன்மையாக தடுத்தாலோ, அல்லது தாம் கைது செய்யப்படுவதிலிருந்து தந்திரமாக தப்பிக்க முயற்சி செய்தாலோ, கைது செய்யும் அதிகாரம் படைத்த அதிகாரி கைது நடவடிக்கைக்கு தேவையான வழிமுறைகளை கையாளலாம்”. (அதாவது தப்பியோட முயற்சிக்கும் நபரை தடுத்து நிறுத்தவும், தம் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவும் தேவையான அளவிற்கு கைது செய்யப்படவேண்டிய நபரை தாக்கியும் தடுத்து நிறுத்தலாம்)

கு.ந.சட்டம் பிரிவு 46(3)ன் படி, “கைது செய்யப்பட வேண்டிய நபர், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டப்படாத நிலையில், அவரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அவருக்கு மரணத்தை விளைவிப்பதற்கான உரிமை வழங்கப்படவில்லை. (அதாவது, கைது செய்யப்படவேண்டிய நபர் மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக சந்தேகிப்படும் நிலையில், அவர் தப்பியோட முயற்சித்தாலோ – கைதை தவிர்க்க முயற்சித்தாலோ அதை தடுப்பதற்காக முயற்சிக்கும் அதிகாரி தேவையெனில், கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையிலும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்)

கு.ந.சட்டம் பிரிவு 46(4)ன் படி, “ பொதுவாக பெண்களை கைது செய்ய நேரிட்டால் சூரியன் உதித்த பின்னரும், சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்கு முன்னதாகவும் மட்டுமே கைது செய்ய வேண்டும்”.

பெண்களை கைது செய்யும்போது பெண் அதிகாரிகளைக் கொண்டே கைது செய்ய வேண்டும். எனினும் பெண் காவல்துறை அதிகாரி இல்லாத நிலையில், அவசியம் என்றால் ஆண் அதிகாரியும் கைது செய்யலாம்.

பொதுவாக ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு குறிப்பிட்ட நபரை கைது செய்ய முனைந்தால் அவருடைய உத்தரவுக்கு பணிந்து கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதத்தில் சரண் அடைவதையே சட்டம் வலியுறுத்துகிறது. ஒரு நபரை கைது செய்யும் காவல்துறை அதிகாரியோ அல்லது அதற்கான அதிகாரம் பெற்ற நபரோ, கைது செய்யப்படும் நபரின் பாதுகாப்பிற்கும், பிற அம்சங்களுக்கும் பொறுப்பேற்கிறார். மேலும் கைது சம்பவம் நடந்த உடன் அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தல் உட்பட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இதேபோல கைது செய்யப்படும் நபருக்கும் சட்டரீதியான பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.

கைது நடவடிக்கை சட்டரீதியாக இருப்பதை உறுதி செய்யவும், சட்ட விரோத கைது சம்பவங்களை தடுப்பதற்காகவும் பல்வேறு சட்டப்பாதுகாப்புகளை சட்டங்களும், உச்சநீதிமன்றமும் ஏற்படுத்தியுள்ளன.

Thanks to Karthik