தாண்டவம் - விக்ரம் தாண்டவமாடிய கதை


 விக்ரம் தாண்டவமாடிய கதை

நம் எல்லோருக்குமே தெரிந்த அறிவியல் உண்மை இது. வவ்வால்களுக்கு பார்வை இல்லை. ஆனாலும் அவை அடர்த்தியான இரவுகளில் கூட, அனாயசமான வேகத்தில் இரைதேடி பயணிப்பதை கண்டிருக்கிறோம். ஒலி அலைகளை எதிரொலித்து தன்னுடைய புவியியல் சவாலை அவை எதிர்கொள்கின்றன. இதை ஆங்கிலத்தில் echolocation என்கிறார்கள்.

நாற்பத்தியாறு வயது டேனியல் கிஷ் அமெரிக்கர். இவர் பிறந்து பதிமூன்றே மாதங்கள் ஆனபோது கேன்சர் நோயால் முற்றிலும் பார்வை இழந்தார். எக்கோலொகேஷன் முறையில் பார்வையுள்ளவர்களுக்கு இணையாக அன்றாட வாழ்வியலை மேற்கொள்கிறார். இவரே தன்னிச்சையாக, யாருடைய ஆலோசனையுமின்றி பார்வை சவாலை எதிர்கொண்ட முறை இது. இவரது இந்த தன்மையை ஒரு சினிமா ஹீரோவுக்கு சித்தரித்து, தமிழில் ‘தாண்டவம்’ என்கிற படம் வெளியாக இருக்கிறது. அப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னைக்கு வந்திருக்கிறார் டேனியல்.

‘புதிய தலைமுறை’ உடனான பிரத்யேக உரையாடலுக்கு ஒப்புக்கொண்டவரை நட்சத்திர ஓட்டல் அறையில் சந்தித்தோம். யாருடைய உதவியுமின்றி டேனியல் தனியாகதான் தங்கியிருக்கிறார். துணைக்கு யாரையும் ஊரில் இருந்து அழைத்து வரவில்லை. அவர் பார்வையற்றவர் என்கிற எண்ணமே ஓட்டல் பணியாளர்களுக்கு சற்றும் ஏற்படவில்லை. பார்வையற்றவர்கள் வழக்கமாக குளிர்கண்ணாடி அணிவார்கள். அவர்கள் மற்றவர்களை பார்த்து பேசும்போது விழி வேறு திக்கை நோக்கும் என்பதால் உரையாடல் சிரமமாக இருக்கும் என்பதற்காக இந்த ஏற்பாடு. டேனியல் நம் கண்களை நேருக்கு நேராக பார்த்துப் பேசுகிறார். “நீங்கள் ஒளி மூலமாக உலகை எதிர்கொள்வதைப் போல, நான் ஒலி மூலமாக எதிர்கொள்கிறேன். இரண்டுமே ஆற்றல்தான். இவற்றுக்கிடையே பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. ஒளிக்குப் பதிலாக ஒலி. அவ்ளோதான்”
 விக்ரம் தாண்டவமாடிய கதை

பார்வையற்றவர் என்று நினைத்து அவரை யாரேனும் தொட்டுப் பேசினால் கோபப்படுகிறார். “எப்போதும் மற்றவரை இப்படி தொட்டு தொட்டுதான் பேசுகிறீர்களா? நீங்கள் எதிரே சோஃபாவில் அமர்ந்திருப்பது எனக்கு நன்றாக தெரிகிறது. அங்கிருந்தே பேசுங்கள்” என்று செல்லமாக கடிந்துக் கொள்கிறார். புகைப்படங்களுக்கு இயல்பாகவே ‘போஸ்’ கொடுக்கிறார். “இடது பக்கம் திரும்புங்கள், லேசாக வலது பக்கம்” என்று நம் புகைப்படக்காரரின் கோரிக்கைகளுக்கு மிகச்சரியாக செவிசாய்க்கிறார்.

“சிறுவயதில் தூக்கம் எனக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது. பார்வையற்றவனுக்கு எது பகல், எது இரவு என்று தெரியாது இல்லையா? பல நாட்களில் என் பெற்றோர் இரவுகளில் உறங்கிக் கொண்டிருந்தபோது, நான் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டிருந்தேன். இரவுகளில் கேட்கும் ஒலி மிக மிக துல்லியமானதாக இருக்கும். அவற்றை அடையாளம் கண்டு வித்தியாசம் உணர்ந்து, ஒவ்வொரு ஒலிக்கும் கற்பனையில் ஒரு தோற்றம் கொடுக்க ஆரம்பித்தேன். எதையாவது கண்டதுமே உங்கள் மூளைக்குள் ஒரு ‘இமேஜ்’ எப்படி தோன்றுகிறதோ, அதுமாதிரியே எதையாவது கேட்டதும் என் மூளைக்குள்ளும் ஒரு ‘இமேஜ்’ உருவாகிறது.

என் வீட்டுக்குப் பின்னால் நான் விளையாட நீளமான வராந்தா மாதிரியான பகுதி இருந்தது. அது என்னுடைய ராஜ்ஜியம். அந்த வராந்தாவுக்கு அந்தப் பக்கமாக பெரிய காம்பவுண்டுச் சுவார். இங்கே விளையாடும்போது ‘சீட்டி’ அடித்து ஒலியெழுப்பி, அது சுவரில் பட்டு எதிரொலிப்பதை ஆர்வமாக கவனிப்பேன். நாளாக நாளாக இம்மாதிரி சீட்டியடித்து, எனக்கும் எதிரில் இருக்கும் ஏதோ பொருட்களுக்குமான தூரத்தையெல்லாம் சுலபமாக கணிக்க ஆரம்பித்தேன். நாளாக, நாளாக இந்த திறமை எனக்குள் வளர்ந்துக் கொண்டே போனது. பெற்றோரின் அபரிதமான ஆதரவும் இருந்ததால் ஒரு கட்டத்தில் நான் இந்த விஷயத்தில் ‘மாஸ்டர்’ ஆகிவிட்டேன்.


தாண்டவம் - விக்ரம் தாண்டவமாடிய கதை

பள்ளி, கல்லூரிகளுக்கு போகும்போதெல்லாம் நான் மற்ற மாணவர்களைப் போல சாதாரணமாகவே இருந்தேன். பல்கலைக்கழகத்தில் உளவியல் பாடம் தேர்ந்தெடுத்து சிறப்பாக தேறினேன். எனக்கு கார், மோட்டார் பைக் ஓட்டத் தெரியாதே தவிர, சைக்கிளை சிறப்பாக ஓட்டத் தெரியும். சைக்கிளை வைத்து மலைகூட ஏறுவேன் தெரியுமா?”

பேசிக்கொண்டே லேப்டாப்பை திறந்து வேகமாக ஏதோ பணிகளை கவனிக்க ஆரம்பித்தார்.

“லேப்டாப்பெல்லாம் பயன்படுத்துகிறீர்களா?”

“இரண்டுவகையான லேப்டாப்புகளை பயன்படுத்துகிறேன். ஒன்று நீங்கள் பயன்படுத்தும் அதே ஆப்பிள் வகை லேப்டாப். இதில் ஆணைகளை எல்லாம் ஒலியாக மாற்றும் சிறப்பு மென்பொருள் இருக்கிறது. இதைவைத்துதான் என் வேலைகளை பார்த்துக் கொள்கிறேன். ‘தாண்டவம்’ படம் தொடர்பாக உங்கள் ஆட்கள் என்னோடு முழுக்க முழுக்க ஈமெயில் மூலமாகதான் பேசினார்கள். இது தொடர்பாக மட்டுமே கிட்டத்தட்ட இருநூறு ஈமெயில்களை நாங்கள் பரிமாறிக் கொண்டோம். இன்னொரு வகை லேப்டாப் பார்வையற்றவர்களுக்கானது. இது எப்படி இயங்குகிறது என்று உங்களுக்கு சொல்லி புரியவைக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை”

“இந்த லேப்டாப்பின் வடிவத்தை நீங்கள் மனதுக்குள் எப்படி உணர்கிறீர்கள்?”

“ஒரு வடிவத்தை நீங்கள் உணர்வதற்கும், நான் உணர்வதற்கும் நிச்சயமாக வித்தியாசமிருக்கிறது. நீங்கள் சொல்வதைப் போல செவ்வகம், சதுரம், வட்டம் என்றெல்லாம் நான் உணர்ந்துக் கொள்வதில்லை. என் மனதுக்குள் ஒவ்வொரு பொருளுக்கும் நான் ஏற்படுத்தி வைத்திருக்கும் ‘இமேஜ்’ வேறானது. தனித்துவமானது. ஆனால் செயற்கையாகவோ, இயற்கையாகவோ உலகில் அமைந்திருக்கும் எல்லாவற்றையுமே நான் உங்களுக்கு இணையாக புரிந்துகொள்கிறேன் என்பதுதான் மேட்டர்”

“பேஸ்புக், ட்விட்டர் மாதிரியான சமூகவலைத் தளங்களில் இயங்குகிறீர்களா டேனியல்?”

“உருப்படியாக பயன்படுத்துவதற்கே நேரம் போதவில்லை. இதெல்லாம் வேறா? மின்னஞ்சலை வாசித்து பதில் சொல்லவே சரியாக இருக்கிறது. ஆனால் எனது நிறுவனத்துக்கு ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் கணக்கு உண்டு”

‘வேர்ல்ட் ஆக்சஸ் ஃபார் ப்ளையண்ட்’ என்கிற லாபநோக்கில்லாத நிறுவனத்தை பண்ணிரெண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார் டேனியல். உலகமெங்கும் வாழும் பார்வையற்ற குழந்தைகளின் திறனை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கம். சுயமாகவே தான் கண்டறிந்த எக்கோலொகேஷன் முறையை, இதுவரை குறைந்தபட்சம் 500 பார்வையற்றவர்களுக்கு போதித்திருக்கிறார் இவர். வாழும் அதிசயம் என்பதால் இவரது முறை குறித்து பல்கலைக்கழகங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, இவரது மூளை எக்கோலொகேஷனக்கு ஏற்றவாறாக மாற்றம் கண்டிருப்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
தாண்டவம் - விக்ரம் தாண்டவமாடிய கதை

“எங்கள் ஊர் எப்படியிருக்கிறது?”

“பார்ப்பவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்பவரிடம் கேட்டிருக்கிறீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். ஏற்கனவே ஒருமுறை கொல்கத்தா சென்றிருக்கிறேன். மற்ற நகரங்களை ஒப்பிடும்போது உங்கள் சென்னை ரொம்ப அமைதியான நகரம். ஒலிமாசு குறைவு. அன்பாகவும், பண்பாகவும் நடந்துக் கொள்கிறீர்கள். கய்யா முய்யாவென்று கத்தாமல் அமைதியாக பேசுகிறீர்கள். சாந்தமான சுபாவம் கொண்டவர்கள் தமிழர்கள்” ஜில்லென்று நம் தலையில் டன் கணக்காக ஐஸ் வைத்தார் டேனியல்.

(நன்றி : புதிய தலைமுறை) 


You may also like

No comments: