உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் - Secrets of Monalisa Painting in Tamil




உலகப்புகழ் பெற்ற  மோனா லிசா ஓவியத்தைப் பற்றி ஒரு செய்தியைப் பல வருஷங்களுக்கு முன் படித்திருக்கிறேன்.  பாரீஸில் லூவ்ர் மிஸியத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியம் ஒரு நாள் திருடு போய்விட்டது. இரண்டு வருஷத்திற்குப் பிறகு தான் அது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் படித்திருக்கிறேன்,

ஆனால் அதற்கு மேல் அதைப் பற்றி நான் யோசித்தது கூட இல்லை, உங்களிடம் யாராவது மோனாலிசா ஓவியம் திருடு போய் அப்புறம் அகப்பட்டதாமே?” என்று கேட்டால், “ ஆமாம்..,,இத்தனை பிரபலமான ஓவியம் திருடு போகிற அளவுக்கு அலட்சியமாக இருந்திருக்கிறார்களே. பாதுகாப்பாக வைத்திருக்க மாட்டார்களா?” என்றுதான் கேட்டிருப்பீர்கள்.


அதை விடுங்கள். என் மனதில் எழுந்த ஒரு கேள்வியைச் சொல்லுகிறேன்,  சரி, இந்த ஓவியத்தைத் திருடியவன் அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?அது, அந்த காலத்திலேயே (1911) 50 லட்சம் டாலர்  மதிப்புள்ளது, யார் வாங்குவார்கள்? வாங்கி வீட்டில் வைக்க முடியுமாயாரும் வாங்க மாட்டார்கள்  என்று தெரிந்தும் ஏன் அது திருடப்பட்டது?

இது பற்றி  தகவல்களைத்  திரட்டினேன்.

முதலாவது அந்த மியூசியத்தில் இருந்த பல அற்புதமான ஓவியங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அவ்வளவு பிரபலமான  ஓவியமல்ல. பார்க்கப்போனால் அது திருடு போய்  மீண்டும்  அகப்பட்டதால்தான் அதற்குத் திடீர் பிராபல்யம் கிடைத்தது என்கிறார்கள்.  சுமார் 200 அறைகள் கொண்ட அந்த மியூசியத்தில் அவ்வளவு அதிக பாதுகாப்புகள் கிடையாதாம். திருடு போனதே  தற்செயலாகத்தான் கண்டு பிடிக்கப்பட்டதாம்.
1911’ம் ஆண்டு 21’ம் தேதி  அதை படம் எடுக்க ஒரு போட்டோகிராபர் போனார். வழக்கமான இடத்தில் அது காணவில்லை,  “ “எங்கே மோனாலிசா படம்?” என்று விசாரித்ததும்தான் மியூஸிய அதிகாரிகளுக்கு  படம் திருடு போனது தெரிந்தது!

அதை விற்கமுடியாது என்று தெரிந்தும் யாரோ எடுத்துப் போயிருக்கிறார்கள். பாரிஸில் இருந்த பல ஓவியர்களிடம் போலீஸ் விசாரித்தது. பொறமை காரணமாகக்கூட அதைத்  திருடி மறைத்து வைத்திருக்ககூடும். ( ஓவியர் பிக்காஸோவையும் கூட விசாரித்தார்களாம்!) பல மாதங்கள் வலை வீசியும்ஓவியம்  கிடைக்கவில்லை, ஆனால் அந்த படத்தை பலவித வியாபாரப் பொருளாகச் செய்து நிறைய பேர் விற்க ஆரம்பித்தார்கள். போதக்குறைக்கு மோனாலிசா படம் மாட்டப்பட்டிருந்த இடத்தைப் பார்க்க (!) மியூசியத்தில் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது!

சுமார் இரண்டு வருடம் கழித்து இத்தாலியில் இருந்த கெரி என்ற  ஒரு ஆர்ட் வியாபாரிக்கு ஒரு கடிதம் வந்தது.  “மோனலிசா ஓவியம் இத்தாலி ஓவியர் லியனார்டோ டாவின்சி வரைந்தது. இந்த பொக்கிஷம் இத்தாலிக்குச் சொந்தமானது, பிரான்சில் அது இருக்கக்கூடாது. மோனாலிசா  ஓவியம் என்னிடம் இருக்கிறது. அதை இத்தாலிக்கேத் திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன், அதற்காக எனக்கு ஒரு சிறிய தொகை  தரவேண்டும் என்று கடிதத்தில் எழுதி இருந்தது. கீழே லியானார்டோ வின்சென்ஸா என்று கையெழுத்து இடப்பட்டிருந்தது.  அவனுடன் தொடர்பு கொண்டு அவனைக் கெரி சந்தித்தார், ஓரு தொகை தருவதாகச் சொல்லி ஓவியத்தை வாங்கி கொண்டு வந்தார், உடனே போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்,

லியானார்டோ வின்சென்ஸா கைது செய்யப்பட்டான். கோர்ட் அவனுக்கு ஒரு வருஷம் சிறைத் தண்டனை கொடுத்தது,  அதன் பிறகுதான் மோனாலிசாவின் புகழ் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது!

Article by, Mr. P.S. Ranganathan (alias 'kadugu'), Fontographist, Chennai. 


You may also like

1 comment: