
திரைக்கதை உத்திகளில் அடிக்கடி விவாதிக்கப்படும் ஒரு விசயம். ஒரு படத்தை வித்தியாசமாய் உருவாக்குவது எப்படி என்பது. வித்தியாசம் என்றால் எந்த அளவுக்கு வித்தியாசம்? எல்லாமே வித்தியாசமாகவா செய்வது ஒரு வழி. அதில் எடுத்துக்கொண்ட விசயத்திலிருந்து, காட்சிகளை கையாளும் முறை, பாத்திரப்படைப்பு, திரைக்கதை வடிவ அமைப்பு என எல்லாவற்றிலும் அசரடிப்பது. இன்னொரு வழி பழகிய விசயங்களை வித்தியாசமான கதாபாத்திரங்கள் அல்லது சூழல்களை கொண்டு உருவாக்குவது.

ராஜுமுருகன் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். நாம் காலம் காலமாய் பார்த்துக்கொண்டிருக்கும் காதல்கதை தான் இது. ஆனால் கண்பார்வையற்ற கதாபாத்திரங்கள், அவர்களின் உலகம், அதில் இருக்கும் சுவாரஸ்யங்கள், ஒரு நாள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள், நட்புகள், நெகிழ்ச்சிகள், வேதணைகள் என அட்டகாசமாய் காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
அதிலும் எந்த இடத்திலும் அவர்களின் நலன் காக்கும் பிரச்சாரங்கள் இல்லாமல், பாருங்கள் இவர்களின் பரிதாப நிலையை என பிச்சைப்பாத்திரம் ஏந்தாமல் அவர்களின் இயல்பான நக்கல், அன்பு, ஏக்கம் என காட்சிப்படுத்தியிருப்பதற்கு சபாஷ்.
நாம் தினமும் பார்த்தும் பார்க்காமல் செல்லும் ‘அவுட் ஆஃப் போகஸ்’ கதாபாத்திரங்களை வைத்து படமாக்கி நம்மை காசு குடுத்து இரண்டரை மணிநேரம் பார்த்து நெகிழ வைத்திருக்கிறார். அதிலும் முதல் படத்தில் என்பதால் அவர் தமிழின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராய் தன்னை இணைத்துக்கொண்டுவிட்டார். வாழ்த்துக்கள்.

இத்தனை நேர்த்தியாய் எடுத்த படத்தில் திருஷ்டியாய் கடைசி காட்சிகளில் இருக்கும் வேகத்தடைகளும், புனேக்கு எப்படி வந்தார் கொடி என்ற குழப்பங்களும். தவிர்த்திருக்கலாமே.
அட்டகத்தி தினேஷ்! அந்தப் படம் வந்து சில வருடங்களாகி விட்டது. ஒரு படம் ஹிட்டானால் முதலில் வாய்ப்புகள் குவிவது கதாநாயகன், நாயகிக்குத்தான். ஆனால் அட்டக்கத்தி படம் எடுத்த தயாரிப்பாளரிலிருந்து, இசையமைப்பாளர் வரை அனைவரும் பல அடிகள் பலமாய் வைத்து முன்னேறிய நிலையில் இவர் மட்டும் அடுத்த படத்தில் கூட நடிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற பலமான கேள்வி பலருக்கும் இருந்தது. அதற்கு தக்க பதில்தான் இந்த படத்தில் அவர் காட்டியிருக்கும் நேர்த்தியான அட்டகாச நடிப்பு. கதாபாத்திரமாய் மாறுவது என்றால் என்ன என்பதற்கு இரண்டரை மணி நேர செய்முறை விளக்கம் குடுத்திருக்கிறார் தினேஷ். அதுவும் தன் இரண்டாவது படத்தில். தமிழ் சினிமாவின் இன்னொரு ராட்சச நடிகன் இவர்.
அறிமுக நடிகை மாளவிகா. அறிமுகம் என்ற சாயல் ஒரு ப்ரேமிலும் இல்லாத அளவுக்கு இந்த சாலஞ்சான ரோலில் காட்சிக்கு காட்சி நேர்த்தியாய் நடித்து அசத்தியிருக்கிறார்.
சந்தோஷ் நாராயணின் இசை படத்துடன் இயல்பாய் பொருந்தி தாலாட்டுகிறது. இசைஞானியின் இசையை உயிரோட்டமாய் கொண்டிருக்கும் படத்தில் இன்னொரு இசையமைப்பாளர் வேலை செய்வதும், இசைஞானியின் இசை மென்மையையும், நுட்பத்தையும் தொடுவது என்பதும் சாதாரண காரியம் அல்ல. அந்த அசாதாரண வேலையை செய்திருக்கிறார் இவர். படத்துடன் அதன் தொணியுடன் ஒன்றி பாடல்களை அமைக்கும் இவரது நேர்மையும் நேர்த்தியும் நிச்சயம் பாராட்டக்கூடியது. மிக விரைவில் தமிழின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராகி சாதித்திருக்கிறார்.
இந்த அணைத்து விசயங்களையும் சாத்தியப்படுத்திய இயக்குநர் ராஜுமுருகனுக்கே அத்தனை வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.தியேட்டருக்குள் செல்லும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் சென்றாலும் படம் முடிந்து வெளிவரும் போது எல்லார் கண்களிலும் ஒரு துளி கண்ணீரை கொண்டு வந்திருப்பதே இந்த படத்தின் நிஜமான வெற்றி. குக்கூ… பார்க்கவேண்டிய பரவசம்.
No comments:
Post a Comment